Friday, 12 November 2010

சாகா கல்வி

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

ஸ்ரீ வள்ளல் பெருமானார் சாகா கல்வியைப் பற்றி குறிப்பிடும் போது விது நெறி என்று குறிப்பிடுகிறார். விது -என்பது அமுத சந்திரனைக் குறிக்கும். ஆக்கினை சக்கரத்தில் வரும் உயிர் வித்தை அருந்தியவன் சாகா வித்தையை கற்றவன் ஆவான். இவ்வாறு ஆதாரந்தத்தில் பெறுகிற அமுதப் பானத்தை தவிர வேறு எதனாலும் சாகா கல்வியைப் பெற இயலாது என்பதை கீழ் வரும் பாடல் மூலம் வலியுறுத்துகிறார் வள்ளல் பெருமானார்.

மேலும் நான்கு வேதங்களும், ஆகமங்களும், சாத்திரங்களும் ஆரவார சந்தைப்படிப்பு என்றும் அதன் மூலம் சாகா கல்வியை பயில இயலாது என்றும் கூறுகிறார்.

சதுமறை ஆகம சாத்திரம் எல்லாம்
சந்தைப் படிப்புநம் சொந்தப் படிப்போ
விதுநெறி சுத்தசன் மார்க்கத்தில் சாகா
வித்தையைக் கற்றனன் உத்தரம் எனுமோர்
பொதுவளர் திசைநோக்கி வந்தனன் என்றும்
பொன்றாமை வேண்டிடில் என்தோழி நீதான்
அதுஇது என்னாமல் ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து ஆடேடி
.

திருமந்திரத்திலும் விதுநெறி வருகிறது.

" வித்திடு வோர்க்கன்றி மேலோர் விளைவில்லை

வித்திடு வோர்க்கன்றி மிக்கோ ரறிவில்லை வித்தினில் வித்தை விதற வுணர்வரேல்
மத்தி லிருந்ததோர் மாங்கனி யாமே.

1909. ஏழாம் தந்திரம் திருமந்திரம்

விது + அற = விதற.
விது = அசைவாம் சலனம்.
மாங்கனி = சிவம்.


உலகியலில் நிலத்தில் வித்து போட்டால்தான் விளைச்சல் உண்டாகும். வித்து இடுவோருக்கே சிறப்புடைய அறிவு உண்டு. விந்து மாயையாம் தூமாயையிலிருந்து கருமுதலாம் விந்து உண்டாகும். அவ்விந்துவிலிருந்து கிட்டும் உயிர் வித்தை அசைவின்றி இருந்து உணர்ந்தால் தயிர் கடைய உதவும் மத்து போல விளங்கித் தோன்றும். அம்மத்தின் உள்ளே சிவம் (மாங்கனி) தோன்றும்..

இப்பாடல்களை புற நோக்கால் திருமந்திரத்தை எவ்வாறு திருவருட்பா வுடன் ஒப்பிடலாம் என்று கூறாதீர்.

அக நோக்கால் பாடல்களில் உள்ள கருத்தை பார்க்கும் போது இந்திரிய ஒழுக்கத்தின் அருமை புரிய வரும். எல்லாம் வல்ல ஸ்ரீ ஞானகுரு வள்ளல் பெருமானார் பாமரனும் புரிந்துக்கொள்ளும் வகையில் இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், மற்றும் ஆன்ம ஒழுக்கத்தைப் பற்றி மிக அருமையாக கூறியிருப்பதும் தெரிய வரும். மேலும் பிற உயிர்களின் மேல் அன்பு அதிகரிக்கும் போது பிற உயிர்களும் தாமும் ஒன்றாகிறது, இது மேலும் வலிமை அடையும் போது காமம் மறைகிறது.

எத்துணையும் பேதமுறா தெவ்வுயிர்

தம் உயிர் போல் எண்ணி உள்ளே

ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்

யாவர் அவர் உளந்தான் சுத்த

சித்துருவாய் எம்பெருமான் நடம் புரியும்

இடம் என நான் தெரிந்தேன்..

திருமந்திரமும் :

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்

அன்பே சிவமாவதாரும் அறிகிலார்

அன்பே சிவமாவதாரும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே.

எனவே தூய்மையான அன்பு பிரகாசிக்கும் போது தேகம் சுத்த , பிரணவ , ஞான தேகமாக மாறி சிவமாகிறது.

சிவமாக்கிக்கொண்டான் என்று ஊதூது சங்கே

சிற்றம்பலத்தான் என்று ஊதூது சங்கே

நவநோக்களித்தான் என்று ஊதூது சங்கே

நான் அவன் ஆனேன்என்று ஊதூது சங்கே

ஆகவே கருணை-தயவு உள்ளம் கொண்டவர்களுக்கு இயற்கையாகவே அவர்கள் துரியம், துரியாதீதம், சிவ துரியம், குரு துரியம், பரதுரியம் என்பதை மிக எளிதாக அடைகிறார்கள். செயற்கையாக (அன்புரு இல்லாமல்) யோகவுணர்வை ஏற்படுத்தி (artificial) அதன் மூலம் யோகம் பயில்பவர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். எனவே எல்லாம் வல்ல ஸ்ரீ ஞானகுரு வள்ளல்பெருமானை சரணடைந்து அவரருளால் அனைத்து நிலைகளையும் கடக்க முயற்சி செய்து, ஆக்கினையில் அருள் அமுதம் உண்டு, சாகா கல்வி பயில முயற்சி மேற்கொள்வோமாக!

தகவல் உதவி:

1. அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணை

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

***********

1 comment:

  1. Please read this book.
    www.vallalyaar.com/?p=409

    see these videos
    http://sagakalvi.blogspot.com/2011/10/self-realization.html

    ReplyDelete