
நம் நாட்டில் சமயஞ்சார்ந்த நூல்கள் வெளிவருவது மிகவும் அரிதாகும். அப்படியே ஒரு நூல் வந்தாலும்கூட, அது பெரும்பாலும் தமிழர்களின் மண்டைக்குள் மதப் பித்தை புகுத்துவதாகவும்; மூட நம்பிக்கையை விதைப்பதாகவும்; அறிவுக்குப் பொறுந்தா சடங்குகளை வளர்ப்பதாகவும்; ஆன்மிகத்திற்கு எதிரான உணர்ச்சிகளை ஊட்டுவதாகவும்; புதுப்புது கடவுளர்களையும் பூசைகளையும் பரிகாரங்களையும் விளம்பரம் செய்வதாகவும் அமைந்திருக்கும் என்பது வருத்தத்திற்குரிய உண்மையாகும்.
இதற்கு முற்றிலும் மாறாக, உண்மை சமயநெறியை அறிமுகப்படுத்தி, ஆன்மிக வழியில் வாழ்வை அமைத்துக்கொள்ள வழிகாட்டும் வகையில் மலேசியாவில் வந்திருக்கிறது ஒரு சிறிய நூல்; ஆனால், அரிய நூல்.
“வள்ளலார் கண்ட சமயநெறி” என்பது நூலின் பெயர். இதன் ஆசிரியர் மலேசியத் தமிழ்நெறிக் கழகத் தோற்றுநர் பாவலர் அ.பு.திருமாலனார். இவர் மிக இளமையிலேயே மெய்யறிவு சார்ந்த இறைமை ஈடுபாடும், பகுத்தறிவுச் சிந்தனையும் ஒருங்கே அமையப் பெற்றவர். திருவள்ளுவருக்குப் பிறகு, சித்தர் பெருமக்களுக்குப் பிறகு தமிழரின் சமயக் கொள்கையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியவர் வள்ளற் பெருமான் இராமலிங்க சுவாமிகள். அதனாலேயே இவரைப் புரட்சித் துறவி என்றும் கூறுவர். வள்ளலார் மீது நூலாசிரியருக்கு இருந்த ஆழ்ந்த பற்றுதலே இந்நூல் உருவாகுவதற்கு காரணியாகும் எனலாம்.
தாம் வாழ்ந்த காலத்திலேயே, தமிழர் கண்ட மெய்ந்நெறி சமயத் தெளிவினை இன்றைய தமிழர்க்கு ஏற்படுத்திவிட வேண்டும் என்ற பேராவலால், தமிழர்ச் சமயக் கோட்பாடுகளை ஆராய்ந்து வெளிப்படுத்த முற்பட்டார் பாவலர் ஐயா. அதற்காகவே, ‘தமிழர் சமயம்’ எனும் அரிய நூலினை எழுதி இதுவரை எவருமே தெளிவுபடுத்தாத பல உண்மைகளை வெளிப்படுத்த முற்பட்டார்.
அதற்கு முன்பதாக, வள்ளலார் கண்ட சமயநெறி, திருமூலர் கண்ட சமயநெறி, சித்தர் கண்ட சமயநெறி எனும் தலைப்புகளில் எழுதினார். அவற்றுள் ஒன்றுதான் இப்போது நூல் வடிவில் வந்திருக்கிறது.
‘ஆரியப் பார்ப்பன’ மேலாண்மையால் தமிழினம் சீரழிந்தது எனும் பெரியாரியல் உணர்வோடு முழு உடன்பாடு உடையவர் பாவலர். இருப்பினும், பார்ப்பன கொடும் பிடியிலிருந்து தமிழினத்தை விடுவித்து, அவ்விடுதலையை நிலைப்படுத்த தக்க வழிமுறைகளை காணவேண்டும் என்று சிந்தித்தார்.
திருமூலரின் ‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ எனும் கோட்பாட்டைப் பெயரளவில் அல்லாமல், ஆழமாக ஆய்ந்து தமிழர் கண்ட மெய்யறிவியலை வெளிப்படுத்த முயன்றார்.
இந்தச் சிந்தனையின் அடிப்படையில், ஆரியப் பார்ப்பனக் கோட்பாட்டை அடித்து நொறுக்கும் வள்ளலாரின் சிந்தனைகளை ஆராய்ந்து பல உண்மைகளை இந்த நூலில் வெளிப்படையாக எழுதி உள்ளார்.
நூலின் தொடக்கத்திலேயே ‘சமயமும் மதமும்’ ஒன்றல்ல என்பதை உணர்த்தும் வகையில், அறிவின் இயல்புகளையும் உணர்வின் இயல்புகளையும் நுட்பமாக விளக்கியுள்ளார். தொடர்ந்து,
*வள்ளுவர் நெறியில் வள்ளலார்*வள்ளலார் கண்ட அருள்நெறியும் மருள் நெறியும்*இந்து பெயர் வரலாறும் – இந்து மதமும்*இந்து மதம் மக்களின் பொது மதமாக இருக்கத் தகுதியற்றது*நாத்திகம் எது?*சாதியும் குறியீடுகளும்-அறிவு மதம் அல்லது மெய்யறிஞர் சமயம்*சவகர்லால் நேருவும் இந்து மதமும்*ஒளி வழிபாடே உண்மை வழிபாடு
ஆகிய தலைப்புகளில் அரிய கருத்துகளை நுட்பமாக விளக்கியுள்ளார். அறிவு தேடலோடு படிப்போருக்கு பல உண்மைகள் புரியும் வகையில் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்நூலை ஆழ்ந்து கற்பதன் வழியாக, தமிழரை மயக்கிய நெறி எது? தமிழர் பின்பற்ற வேண்டிய நெறி எது? என்பதைத் தெளிவாக உணரலாம்.
இந்த நூலினை வெளிப்படுத்துவதன் வழியாக, தமிழரிடையே ஊறிக்கிடக்கும் மதமயக்கு நீங்க வழிபிறக்கும் என நம்பலாம். மதவெறியர் சிலருக்கு இந்நூல் அதிர்ச்சியூட்டலாம். அவர்கள் அதிர்ச்சி அடைவார்கள் என்பதற்காக உண்மைகளை உரைக்காமல் இருக்க முடியாது.
தமிழரின் வீழ்ச்சிக்கு மதப்பித்து மிகப்பெரிய கரணியமாகும். இதிலிருந்து தமிழனை விடுவிக்க, தமிழும், தமிழின உணர்வும், திருக்குறள் நெறியுமே மிகச் சரியான கருவிகளாக அமையும். இந்த அடிப்படை உண்மையை உள்ளார்ந்து உணர்த்தும் வள்ளலாரின் உண்மை உள்ளத்தைத் தமிழர்க்குத் தெரிவிப்பதே இந்நூலின் நோக்கமாக இருக்கிறது.
நூலின் விலை: பத்து நிங்கிட் மட்டுமே (RM10.00)நூல் கிடைக்குமிடம்: மலேசியத் தமிழ்நெறிக் கழகம், Lot.274, Kpg. Bendahara Baru, Jalan Sungai Tua, 68100 Batu Caves, Selangor.
இரா.திருமாவளவன் Tel: 016-3262479